இணையமும் பிரதேச வளர்ச்சியில் அதன் பங்களிப்பும்

Friday, August 21, 20090 comments



நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இத் தகவல் தொடர்பாடல் யுகத்தில் இணையமானது உலகம் முழுவதும் நீக்கமற பரவி நிற்கிறது. அபிவிருத்தியடைந்த நாடுகள் முதற்கொண்டு ஆபிரிக்கா, அந்தார்ட்டிக்கா என எல்லா இடங்களிலும் இணையமானது தனது காலடியைப் பதித்துள்ளது. இதற்கு கணணி உட்பட தகவல் தொடல்பாடலுக்குரிய சாதனங்களினதும், அவை சார்ந்த தொழில்நுட்பங்களினதும் அதீத வளர்ச்சியும் அவை ஓரளவு பாவனையாளரின் கொள்வனவு சக்திக்கு உட்பட்ட செலவில் கிடைக்கக்கூடியவாறு இருப்பதுவும் பிரதானமான காரணங்களாகும். மேலும் கம்பியில்லா தகவல் பரிமாற்ற முறைமையானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் புதிய பரிணாமத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். கம்பி வழி மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதி இல்லாத இடங்களில் கூட சூரிய மின்சாரத்தையும் செய்மதி அல்லது ஏனைய கம்பியில்லாத் தொழில்நுட்பங்கள் (
HSPA , GPRS, 3G,முதலியன) மூலம் இணைய வசதியினை பெறக்கூடியதாக உள்ளது.

இந்த வகையில் கணணியில் பரீட்சயமற்றவர்களுக்கும், அடிப்படை கணணி அறிவினை குறிப்பிட்ட சில மென்பொருள் தொகுப்புகளில் மாத்திரம் பெற்ற வளர்ந்தோருக்கும் இணையமானது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. இணையத்தினையும் மின்னஞ்சலையும் ஒரே விடயங்கள் என எண்ணுபவர்கள் இன்றும் உள்ளனர். இதற்கான முக்கிய காரணமாயிருப்பது, இணையம் எனும் மாய உலகமானது பல்வேறு விசித்திரங்களையும் புதிர்களையும் உள்ளடக்கிருப்பதும் அது நாளுக்கு நாள் தொழில்நுட்பரீதியாக மாறிக்கொண்டிருப்பதுவுமாகும். எனினும் ஆர்வத்துடன் முயன்றால் இணையமானது மிக எளிதாக கையாளக்கூடிய ஒரு வளமாகும்.

இணையம் என்பது பல்வேறு தன்னிச்சையான கணணிகளினதும் கணணி வலையப்புகளின் சேர்க்கையாகும். இது உலகளாவியரீதியிலான இலத்திரனியல் தகவல் பரிமாற்றத்துக்குரிய கட்டமைப்பை வழங்குகிறது. இணையம் ஒரு தனிப்பட்ட நபருக்கோ, அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல. சர்வதேச தன்னார்வத்தொண்டு நிறுவனமான இணைய சங்கம் அல்லது இணைய சமுதாயம்
(Internet Society) எனப்படும் நிறுவனம் இணையத்தினைக் கட்டுப்படுத்துகிறது. இணையத்தில் பல்வேறு நபர்களாலும், அமைப்புக்களாலும் இணையத்தளங்கள் (Web Sites) நடாத்தப்படுகின்றன. இவ்விணையத்தளங்களில் பிரதானமாக இணையப் பக்கங்களும் (Web Pages)> அசையும் படங்கள் (Video & animations) , செயல்நிரல்கள் (Programs) வேறு இணையப்பக்கங்களுக்குரிய இணைப்புகள்(Hyperlinks)போன்றவை காணப்படும். மேலும் குறிப்பிட்ட துறை சம்பந்தமாக தொர்ச்சியாக எம்மை அறிவுறுத்திக்கொண்டிருக்கும் செய்திக்குழுக்களும் (Newsgroups), இலத்திரனியல் தொடர்பாடலின் அச்சாணியாகவும் இணையத்தின் தாய் என வர்ணிக்கப்படக்கூடியதுமான மின்னஞ்சலும் இணையத்துடன் இரண்டறக்கலந்த ஏனைய சேவைகளாகும்.

இணையத்தின் கட்மைப்பை அருகிலுள்ள படம் காட்டுகிறது.

அடிப்படை நிலையில் நிறுவனங்களும், வீட்டுப்பாவனையாளர்களும், இணையத்துடன் இணைந்திருக்கின்றனர். பொதுவாக பாவனையாளர்கள் உள்ளுர் இணைய சேவை வழங்குனர்கள்
(Internet Service Providers)மூலமாக இணையத்துடன் இணைகின்றனர். உள்ளுரிலுள்ள இணைய சேவை வழங்குனர்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலான இணைய சேவை வழங்குனர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றனர்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு இணையமானது காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியுமெனினும், பெரும்பாலான இணைய பாவனையாளர்கள் வெறுமனே செய்திகளைப் பார்வையிடுவதற்கும், சினிமா, விளையாட்டு மற்றும் நகைச்சுவை போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கும், நண்பர்களுடனும் சிலவேளைகளில் அறிமுகமற்றவர்களுடனும் அரட்யைடிப்பதற்குமே அதிக நேரத்தினை செலவிடுகின்றனர். எனினும் ஒரு கிராமத்தில் இணையமானது வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்தப்படும்போது அது மிக நல்ல பயன்களையே ஈட்டித்தரும் என்பது திண்ணமாகும். இந்த அடிப்படையில் கிராமங்களில் இணையம் அல்லது தகவல் தொழில்நுட்பமானது பிரயோகிக்கப்படக்கூடிய சில வழிமுறைகள் இங்கு தரப்பபட்டுள்ளன. இவ்வுத்திகள் எமது பிரதேசத்திலும் யதார்த்தரீதியான அணுகுமுறையில் அரசாங்கம், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைவுடன் செயல்படுத்தப்படுமாயின் அது ஒரு புத்தெழுச்சியை கிராமங்களில் ஏற்படுத்தமுடியும். மேலும் இணையப்பாவனைக்கு ஆங்கில அறிவும் அடிப்படை கணணி அறிவும் தேவை என்ற எண்ணம் படிப்படையாக இன்று தகர்க்கப்பட்டுக்கொண்டு வருகிறது.

மின்னஞ்சல் என்பது இலத்திரனியல் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து யாரிற்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும், பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகின்றது. உலாவிகள் ஊடாக இலவச சேவையை வழங்குபவர்களில்
www.gmail.com, www.yahoomail.com, மற்றும் www.live.com எனும் இணையத்தளங்கள்; பிரபலமாக உள்ளன. ஓரு மின்ஞ்சல் முகவரியானது ஒருவருடைய அடையாள அட்டை போன்று செயற்படுகின்றது. வேறு இணையத்தளங்களிலோ அல்லது அமைப்புகளிலோ இலத்திரனியல் ரீதியாக அங்கத்துவம் பெறும்போது மின்னஞ்சல் முகவரி வினவப்படுகிறது. அத்துடன் இணைய அரட்டை (Chat) செய்வதற்கு மின்னஞ்சல் முகவரி இருத்தல் அவசியமாகிறது

தமிழ் மொழியைப் பொறுத்த வரையில், சங்க காலத்தில் ஐந்து திணைகளில் வாழ்ந்ததாக தமிழ் இலக்கிய ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. எனினும் இன்று ஆறாவது திணையாக கருதக்கூடிய இணையத்திலும் தமிழ் மொழி வளர்க்கப்பட்டு கொண்டு வருகிறது. எந்தக் கணணியிலும், எந்த இயங்கு தளத்திலும் எழுத்துக்களை வாசிக்கக்கூடிய யுனிக்கோட் (Unicode) எமுத்துரு வடிவங்கள் மூலம் இணையத்தளங்களில் தகவல்கள், செய்திகள் மற்றும் இலக்கியப்படைப்புகள் வெளியிடப்படுகின்றன. இம்முறை மூலம் உருவாக்கப்படும் ஆவணங்களைப் பார்வையிட தமிழ் எழுத்துருக்கள் (Fonts) அவசியமில்லை. அத்துடன் தமிழை மொழி ஊடகமாக கொண்ட கலந்துரையாடல் குழுக்கள்
(Discussion Groups)மூலம் மொழி மற்றும் சமயம் சார்ந்த விடயங்களை பரிமாறிக் கொள்ளக்கூடிதாக உள்ளது. அரியநூல்கள் நூல்கள் மற்றும் இலங்கியங்கள், ஆவணங்களாகவும் (Documents - PDF,HTML) ஓலிவடிவத்திலும் (Audio - MP3, Live Streaming) இணையத்திலிருத்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. மேலும் புலம் பெயர் நாடுகளில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்காக இலவசமாக தமிழ்க் கல்வியை வழங்கும் இணையத்தளங்கள் கூட உள்ளன. தமிழில் யுனிக்கோட் முறையில் தட்டச்சு செய்வதற்கு இ-கலப்பை (E-Kalappai), முரசு போன்ற மென்பொருட்கள், சாதாரண முறையில் (பாமினி எழுத்துரு வடிவம் தட்டச்சு செய்யவும், Google Indic Transliterate (www.google.com/transliterate/indic/Tamil) ) மூலம் உச்சரிப்பு அடிப்படையில் தட்டச்சு செய்யுவும் வசதியை வழக்குகின்றன. மேலும் www.googletamil.com எனும் இணையத்தள முகவரி தமிழ் மொழியில் தேடலை வழங்குகிறது. கட்டற்ற தகவல் களஞ்சியமான ta.wikipedia.org தமிழ் மொழியில் பல்வேறு ஆக்கங்களையும் கட்டுரைகளையும் வழங்குகிறது.

தற்போது தகவல் பரிமாற்றத்தில் வலைப்பூக்கள் (Blogs) மற்றும் சமுக வலைப்பின்னல்கள் (Social Networks) போன்றவை பிரபலமாக உள்ளன. வலைப்பூக்கள் மூலம் ஓவ்வொருவரும் தமது கலைத்திறமையை வெளிக்காட்ட வழிசமைக்கிறது. பல்வேறு பிரபலங்களும் அமைப்புக்களும் இன்று வலைப்பூக்களைப் பயன்படுத்தி தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். வலைப்பூக்களை இலவசமாக ற
www.blogger.com, www.blogspot.com போன்ற இணையத்தளங்கள் வழங்குவதாலும் அவற்றில் தகவல் பதிவேற்றம் செய்வது எளிமையாக்கப்பட்டிருப்பதாலும் பலர் இவ் வலைப்பூக்களையே விரும்புகின்றனர். மேலும் www.facebook.com, www.hi5.com போன்ற இணையத்தளங்கள் பழைய உறவுகளை, நட்புக்களை புதுப்பிக்கவும் புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளவும் வழியமைக்கின்றன.

ஒரு பிரதேசத்தின், குறிப்பாக ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் இணையமானது காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும். இதில் முக்கியமாக, ஓரு கணணியையோ அல்லது இணைய தொடர்பையோ பெறமுடியாத ஏழை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் முதலானவர்களுக்கு அவரக்குரிய திணைக்களங்களுடாக இணையத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கமுடியும். தொழிலாளர்களுக்கும், சிறு தொழில் முயற்சியாளர்களுக்கும் அவர்களின் தொழில் களை மேன்மைப்படுத்தவும் சந்தை வசதிகளை விரிவாக்கவும் இணையமானது பங்களிப்பை வழங்கலாம். பொருத்தமான தொடர்பாடல் வசதிகள் மூலம் பல்வேறு பிரதேச விவசாயிகள், துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் வியாபாரிகள் இணையே கலந்துரையாடல்களை ஏற்படுத்த முடியும். மேலும் புதிய பயிரினங்கள், நோய் பீடைத்தாக்கங்கள் மற்றும் அவற்றுக்குரிய தீர்வுகள் போன்றவற்றினை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இயற்கைவளம், அழகிய கடற்கரைகள் மற்றும் வரலாற்றுப்பின்னணி போன்றவற்றினைக் கொண்ட கிராமங்களில் உல்லாசப்பிரயாணத்துறையை ஊக்குவிக்கவும் இணையத்தினை பயன்படுத்தமுடியும்.

கல்வி மற்றும் தகவல் துறையில் இணையமானது விசாலமான வீச்சில் உதவமுடியும். பாடசாலை மாணவர்க்கு தமது பாடசாலை பாடவிதானம் முதற்கொண்டு, புதிய பாடத்திட்டத்தினடிப்படையில் அவசியமான ஒப்படைகள், காட்சி விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்குரிய தகவல்களை இலகுவாக இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். பல்வேறு தொழில் சார் நிபுணர்கள் கலந்து கொள்ளும் குழுக்களில் (Groups) அங்கத்துவம் பெறுவதன் மூலம் உயர்கல்வி மாணவர்கள் மற்றும் தொழில் புரிவோர் தம் துறை சார்ந்த அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும். செய்தி மற்றும் தகவல் வலையமைப்புக்களின் வீச்சானது இணையம் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெறுகின்றனர். மேலும் தேசிய பத்திரிகைகள,; பிராந்திய நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதலியன இணையத்தில் பிரிசுரிக்கப்படுவதன் மூலம் உடனடி செய்திகளை மக்கள் பெற்றுக் கொள்வதுடன் அரசாங்க அறிவித்தலகள், வர்த்தமானிப்பிரகடனங்கள், அனர்த்த முன்னறிவிப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை கிராமத்து மக்கள் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

எமது கிராமத்தைப் பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏனைய அம்பாரை மாவட்ட தமிழ்க் கிராமங்களை விட குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளது எனலாம். பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் இன்று ஒரு கணணி ஒரு அத்தியாவசியப் பொருளாக கருதப்படும் நிலை உள்ளது. மேலும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறுவப்பட்ட நெனசல அறிவகங்கள் மற்றும் தனியார் நிறவனங்கள் குறைந்த செலவில் தகவல் தொழில்நுட்பக்கல்வியையும் அதிவேக இணைய இணைய வசதியையும் வழங்குகின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் சாதாரண தொலைபேசி இணைப்புக்கள் மூலம் இணையவசதியினை வீடுகளில் பெறுகின்றனர். தற்போது அதிவேக இணைய இணைப்புகளைப்
(ADSL/HSPA)) பயன்படுத்துவோர் தொகையும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டு வருகிறது.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவாறு காரைதீவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொழில்சார் முறையில் வடிவமைக்கப்பட்டு பேணப்பட்டு வரும் www.karaitivu.com மற்றும் www.karaitivu.org எனும் இரு இணையத்தளங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. காரைதீவிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் காரைதீவு கிராம வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடைய அன்பர்களால் www.karaitivu.com இணையத்தளமானது நடாத்தப்பட்டு இவ்வூரில் வசித்துக் கொண்டிருப்பவர்களின் தொடர்பாடலுடன் சிறப்பாக பேணப்பட்டுவருகின்றது. கிராமத்தில் நடைபெறும் சகல விதமான சமய, கலை, கலாசார நிகழ்வுகள் உடனடியாக தன்னார்வ அடிப்படையில் பிரசுரிக்கப்படுவது இவ்விணையத்தளத்தின் சிறப்பம்சமாகும். மேலும் பரீட்சை முடிவுகள் திருமணம் மற்றும் இறப்பு பற்றிய தகவல்களை, புலம் பெயர் மக்களுக்கு மட்டுமன்றி காரைதீவிலிருந்து இலங்கையின் வேறு பாகங்களில் வசிப்பவர்களுக்கும் எடுத்துச் செல்வதில் இவ்விணையத்தளம் பெரும் பங்காற்றுகிறது. மேலும் காரைதீவில் வசித்துக் கொண்டிருப்பவர்களினதும், புலம் பெயர்ந்தவர்களினதும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இவ்விணையத்தளத்தில் காணப்படுகின்றன. www.karaitivu.org இணையத்தமானது தகவல் தொழில் நுட்பத்துறையில் ஈடுபாடுடைய இளைஞர்களால் தாம் சார்ந்த PLUS ஒன்றியத்தின் சார்பாக நடாத்தப்பட்டுக் கொண்டு வருகிறது. இவ்விணையத்ளமும் சமய, கலை, கலாசார நிகழ்வுகள் பற்றி அறியத்தருவதுடன் செய்திகளை உத்தியோக பூர்வமாகவே வெளியிடுகிறது. மேலும் இது ஒரு செய்தித்தளம் என்பதை விட தகவல் தளம் என்றே இணைய ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. இவ்வணைத்தளமானது தனது பயனாளர்களுக்கு
name@karaitivu.org முகவரிகளையம் சில பிரபல நிறுவனங்களுக்கு name.karaitivu.orனும் வடிவில் துணை இணையத்தள முகவரிகளையும் கூட வழங்கியுள்ளது. மேலும் பொது அறிவு மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்கள் பிரசுரிக்கப்படுவது இவ்விணையத்தின் சிறப்பியல்பாகும். இவ்விரு இணைத்தளங்களும் தனிப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்தும் கொடுப்பதைக் குறைத்து எமது பிரதேச செய்திகளுக்கும், கலை இலக்கியப் படைப்புகளுக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்தல் நன்மையாகும்.

மேலும் இவ்விணையத்தளங்களை ஏற்பாட்டாளர்களாக் கொண்டு, தகவல் தொழில் நுட்ப நிலையங்களை அமைத்து அதன் மூலம் பெறும் வருமானத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் உதவிகளிலிருந்தும் கிராமத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பிரதேச உட்கட்டமைப்பு மற்றும் வறுமை ஓழிப்பிற்கும் உதவமுடியும். மாணவர்களுக்கு உயர்கல்வி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு புலமைப்பரிசில் திட்டங்களை முன்வைக்க முடியும். இதன் போது பணப்பரிமாற்ங்கள் மற்றும் செலவுகள் பற்றிய விபரங்கள் அங்கத்தவர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் இணையம் மூலம் உடனுக்குடன் தகவல் பரிமாற்றப்படுவதால் இவ்வாறான செயற்பாடுகளில் நம்பகத்தன்மை ஏற்படுட்த்தப்படும். இணைய கலந்துரையாடல் குழுக்களை ஏற்படுத்தி எமது ஊரைச் சேர்ந்தவர்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் கலந்துரையாடல்களை நேரடியாக மேற்கொள்ளக்கூடியதாக வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். இறுதியாக இணையம் எனும்போது அது பற்றிய தப்பான அபிப்பிராயமே பொதுவாக நிலவுவதால் இணைய வசதி வழங்கும் நிறுவனங்களிலிருந்து பெண்கள் பயன் பெறுவது குறைவாக உள்ளது. இது எமது பிரதேசத்தில் இணையத்தின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ளது. இவ்வாறான மனப்பான்மையானது நீக்கப்பட்டடு அனைவரும் இணையத்தினை பயன்பதுத்தக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த அனைவரும் உழைக்கவேண்டும்.

ஆக்கம்

suranuthan@gmail.com
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Suranuthan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Premium Blogger Template